அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்த இருவரை அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த அம்பத்துர் சூரப்பட்டு சுங்கச் சாவடி அருகே காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு காரில் வந்த இருவர் சந்தேகப்படும்படி நின்றிருந்துள்ளனர். அவர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதால் வாகனத்தை சோதனையிட்டனர். அதில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நரசிங்க ராவ், சுரேஷ் மஹாபட்ரா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்;ந்து இவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் சரக்கத்திலும் தற்போது கஞ்சா விற்போரை பிடிக்க பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில், சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.