கைது செய்யப்பட்ட வரதராஜன் ஆழ்வார்  file image
குற்றம்

"நான் அமலாக்கத்துறையில் இருந்து பேசுறேன்” - அதிகாரி போல் நடித்து 4 எம்.எல்.ஏக்களை ஏமாற்றிய இளைஞர்!

அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் பணம் பறிக்க முயன்ற நபரைத் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக சிவசங்கரன் இருந்து வருகிறார். இவரது வீடு ரெட்டியார் பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ளது. எம்.எல்.ஏ. சிவசங்கரனின் செல்போன் எண்ணுக்கு நேற்று மாலை 5.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்ததுள்ளது . மறுமுனையில் பேசிய நபர் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து அவரிடம் சிவசங்கரன் பேச்சுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அந்த நபர், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் வந்துள்ளது. இது பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு எம்.எல்.ஏவும் தாராளமாக விசாரித்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் அந்த நபர் வந்துள்ளார்.

இதனையடுத்து எம்.எல்.ஏ சிவசங்கரனிடம் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனவும், போனில் பேசியது நான் தான் என கூறியுள்ளார். அவருடைய வருமானம் மற்றும் சொத்து விவரங்களைக் கேட்டுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த எம்.எல்.ஏ சிவசங்கரன் ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் அவர்களுடைய பாணியில் விசாரணை நடத்தியதில் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (35) என்பது தெரியவந்தது.

வரதராஜன் ஆழ்வார்

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது. சிவசங்கர் எம்.எல்.ஏ.வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரம் வீட்டிற்குச் சென்று அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், விசாரணை நடத்த வந்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து 2-வதாக லாஸ்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீட்டிற்கும் சென்று பணப்பரிவர்த்தனை மோசடி செய்ததாகக் கூறியுள்ளார். அந்த தவறை மறைக்கவும், உயர் அதிகாரிகளை சரிக்கட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூபாய்1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் பணம் கொடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

சி.சி.டி.வி காட்சி

மேலும் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமியை செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கத் துறை அதிகாரி எனக்கூறிப் பேசியுள்ளார். அதேபோல் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.