மாணவன் ஆசிரியர் நிழல் படம் WEB
குற்றம்

ம.பி.: ஆசிரியர்கள் தாக்கியதில் காயம் அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிருஷ்ணா வாந்தி எடுத்த நிலையில் அவரின் கை கால்களும் செயலிழந்து இருக்கிறது. இதை கண்டு பதறிய கோக்சிங் தனது மகனான கிருஷ்ணாவை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

Jayashree A

போபாலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் அடித்ததால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த எட்டாம் வகுப்பு மாணவன் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் போபாலுக்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் கோக்சிங். இவர் அங்கிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கடைசி குழந்தையான கிருஷ்ணா, அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த 12ம் தேதி அன்று கிருஷ்ணா பள்ளி சென்றுள்ளார். அங்கு வீட்டு பாடத்தை முடிக்காமல் இருந்ததாக கூறி ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் கிருஷ்ணாவை தடியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணா வாந்தி எடுத்த நிலையில் அவரின் கை கால்களும் செயலிழந்து இருக்கிறது. இதை கண்டு பதறிய கோக்சிங் தனது மகனை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கோக்சிங்கின் இரண்டாவது மகனும் கிருஷ்ணா படித்த அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். ஆகையால் தனது இரண்டாவது மகனிடம் கிருஷ்ணாவின் நிலமைக்கு காரணம் என்ன என்று விசாரிக்கையில், கிருஷ்ணாவை 2 ஆசிரியர்கள் அடித்ததாகவும் அவன் கோழிபோல் சுருண்டு விட்டதாகவும் கூறவே... கோக்சிங் சம்பந்த பட்ட பள்ளியை அணுகி தனது குழந்தை கிருஷ்ணாவுக்கு நடந்த கொடுமைக்காக நியாயம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஞாயிற்றுகிழமை) இறந்து விட்டார்.

இதனால் ஆத்திரமுற்ற கோக்சிங் குடும்பத்தினரும் உறவினர்களும் ஞாயிற்றுக்கிழமை நீதி கேட்டும் சம்பந்த பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் போராட்டம் நடத்தினர். இதேபோல் எட்டு மாதங்களுக்கு முன்பும் இதே ஆசிரியர்களால் கிருஷ்ணா தாக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிபட்டு வந்ததாகவும் கோக்சிங் போலிசாரிடம் கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கோக்சிங்கிற்கு உறுதிமொழியை தந்த பிறகு போராட்டமானது கைவிடப்பட்டது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்