நடிகர் ஆர்.கே.வீட்டில் அவரது மனைவி கை, கால்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ்காலனி 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் `எல்லாம் அவன் செயல்’ படத்தின் நாயகன் நடிகர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் (63). இவரது மனைவி ராஜீ (53). கடந்த 10ம் தேதி ராஜீ வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 200 சவரன் நகைள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், நடிகர் வீட்டில் வேலைபார்த்த நேபாளம், கைலாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்ற தபல் கத்திரி (36) என்பவர் தனது நேபாள நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து, 16 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின், தபல் கத்திரி, கரண் கத்திரி (32), ஆகியோரை கும்மிடிப்பூண்டியில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், மற்ற குற்றவாளிகளான நேபாளத்தை சேர்ந்த சங்கர்(37), அவரது மனைவி துர்கா(35), புஷ்கர்பகதுார்(40), அவரது மனைவி பிஷ்ணு(37), மாதன் தாவத்(23), அருணாசல பிரதேசத்தை சேர்ந்த பாஞ்சோ(28), ஆகிய 8 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 91 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.