கருவாட்டு மூட்டைகளுடன், கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஆந்திர வனப்பகுதியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் பரங்கிமலை காவல் ஆய்வாளர் ராஜலெட்சுமி தலைமையிலான மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் மகேஷ் என்பவர் கஞ்சாவை மொத்த விற்பனைக்கு வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் "களம்பாத்தம்மன் துணை" என்ற பெயரில் வரும் லாரியில் கஞ்சா கடத்திவரப்படுவதாகவும், அந்த லாரியின் மீது கண்கள் படம் வரையப்பட்டிருக்கும் என தெரியவந்தது. இத்தகவலின் அடிப்படையில் செங்குன்றம் சோதனைச் சாவடியில் இரவும் பகலும் என நான்கு நாட்களாக தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட அடையாளங்களுடன் 50 கருவாடு மூட்டைகளை லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர் லாரியில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள 9 கஞ்சா மூட்டைளை கைப்பற்றினர்.
இது தொடர்பாக மகேஷ், முரளி, திண்டுகல்லைச் சேர்ந்த மகுடிஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் 1.50 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுனர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் கஞ்சா மூட்டைகள் விசாகப்பட்டினம் அருகே உள்ள துனி மலைப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. சிறப்பாக செயல்பட்டு கடத்தல் கும்பலைப் பிடித்த ராஜலெட்சுமிக்கு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பரிசு வழங்கி பாராட்டினார்.