குற்றம்

இளைஞர் கடத்தல் வழக்கில் திருப்பம்: காவலர், முன்னாள் ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 7 பேர் கைது

இளைஞர் கடத்தல் வழக்கில் திருப்பம்: காவலர், முன்னாள் ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 7 பேர் கைது

JustinDurai
திருப்பூர் அருகே நடந்த ஆள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் காவலர், முன்னாள் ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாபாளையத்தில் வசித்துவந்த சக்தி என்ற மகேஷ்வரன் கடந்த 26ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இதுகுறித்த புகாரில் 4 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கக் கட்டிகளே கடத்தல் விவகாரத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்ட மகேஷ்வரன் பாஜக பிரமுகர் ஒருவரிடம் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர், ஓராண்டுக்கு முன் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தபோது காவல் துறையினரைக் கண்டு அதனை விட்டுவிட்டு வந்ததாக கூறியுள்ளார். கடத்தலுக்கு முதலீடு செய்ததாக கூறப்படும் யாசர் அராபத், முகமது ரிஸ்வான் ஆகியோர், தங்கத்தைத் திரும்ப பெற முயற்சித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் மகேஷ்வரன் தங்கம் குறித்து தகவல் தெரிவிக்காமல் தலைமறைவானதால் அவரைத் இவ்விருவரும் கடத்தியுள்ளனர். இவ்விவகாரத்தில் யாசர் அரபாத், முகமது ரிஸ்வான், கோவை மாநகர காவலர் ராஜேஸ்வரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தொடந்து, ஆயுதப்படையில் இருந்து பணி நீக்கம் செயப்பட்ட காவலர் கார்த்தி உள்ளிட்ட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் ராஜேஷ்வரன், முன்னாள் காவலர் கார்த்திக் இருவரும் கோவை போத்தனூரில் நடந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.