குற்றம்

பகலில் சாமியார் வேடம்... இரவில் கொள்ளை - உல்லாசமாக இருந்த கும்பல் கைது

பகலில் சாமியார் வேடம்... இரவில் கொள்ளை - உல்லாசமாக இருந்த கும்பல் கைது

webteam
வாழப்பாடி அருகே பகலில் சாமியார் வேடமணிந்து நோட்டமிட்டு இரவில் மின்வாரிய ஊழியரின் வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 80 ஆயிரத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (62). இவர் தனது மனைவி ராஜாமணியுடன் கடந்தாண்டு  ஜூலை மாதம் பழனிமலை முருகன் கோயிலுக்குs சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோக்களில்  வைத்திருந்த 40 சவரன்  தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து சின்னசாமி காரிப்பட்டி போலீசில் புகார்  அளித்திருந்தார்.
புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன்(36), பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த அமீர்ஜான் (36) மற்றும் செல்வராஜ் (எ) சாகுல் ஹமீது (53) ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனர். மேலும் இந்த கும்பலிடம் இருந்து 40 சவரன்  நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆட்டோவை போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன்மீது, ஏற்கனவே சேலத்தில் இரண்டு கொலைவழக்கு மற்றும் ஒரு கொலைமுயற்சி வழக்கு, ஆள்கடத்தல் வழக்கு, கொள்ளை மற்றும் திருட்டு  வழக்குகளும் உள்ளன.
இதனிடையே மணிகண்டன் அயோத்தியாப்பட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கொள்ளையில் கிடைக்கும் பணத்தில் தனது காதலியை வரவழைத்து  உல்லாசமாக  இருந்து வந்துள்ளார். கொள்ளையடித்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு, அவர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு நேற்று வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சன்மதி  கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் உட்பட 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.