10 லட்ச ரூபாய்க்கு பிட்காயின்யில் முதலீடு செய்தால் ரூ.12 ஆயிரம் மதிப்பிளான அமெரிக்கா டாலர் தருவதாக கூறி, புதுச்சேரி ஜிப்மர் பயிற்சி மருத்துவரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட குஜராத்தை சேர்ந்த 3 பேரை பிடிக்க புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் குஜராத் விரைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட்ட ராமண்ய்யா (எ) ரமணா (36), புதுச்சேரி கோலாஸ் நகரில் தங்கி உள்ள இவர் ஜிப்மர் மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராகவும், எம்.டி படிப்பும் படித்து வருகிறார். இணையளத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், பிட்காயின் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் அமெரிக்க டாலர் கிடைக்கும் என தெரிவித்திருந்ததை அடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மோஹூல், ஹரிஷ் பாய், பூதேவ் ஆகியோர் அவரிடம் பேசி பணத்தை முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளளனர்.
இதனை நம்பிய ரமணா ரூ.10 லட்சத்தை முதலீடு செய்துள்ளார், ஆனால் அவர்கள் கூறியபடி ரூ. 12 ஆயிரம் அமெரிக்க டாலரை இவரது வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இதனிடையே ரமணா அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமணா, சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் மனோஜ் குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரமணா குஜராத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பிய பணத்தை, அவர்கள் அடுத்தடுத்து இரண்டு, மூன்று வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளதும், பிட்காயினில் போலியான அக்கவுண்ட் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்ய புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் குஜராத் விரைந்துள்ளனர்.