அஸ்ஸாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் டோக்மோகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமமான ரோகிமாபூரில் ஒரு இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கவுகாத்தியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மரணமடைந்தார். அவர் அந்த ஊர்த்தலைவரின் உறவுக்காரப் பெண்.
இறந்த பெண்ணிற்கு இறுதிச்சடங்கு செய்யும்போது, கிராமத்தினர் ஒரு கூட்டமாக சேர்ந்து அந்தப் பெண்ணின் மரணத்திற்கு கணவனை இழந்த ராமாவதி ஹலுவா(50 வயது) என்ற பெண்ணும், அவருடைய மகள் பிஜோய் கவுரும்(28 வயது) தான் காரணம் என குற்றம்சாட்டியிருக்கின்றனர். அவர்கள் பில்லி சூனியம் செய்துதான் கொன்றுவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.
சண்டை வலுவாகவே, அந்த பெண்ணையும், அவர் மகளையும் கூட்டத்தினர் பயங்கரமாகத் தாக்கியிருக்கின்றனர். இதனால் இருவரும் மரணமடைந்துள்ளனர். அவர்களை கிராமத்திற்கு அருகிலிருக்கும் மலைக்கு இழுத்துச்சென்று, அங்கு அவர்களுடைய தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி, இருவரின் உடலையும் தகனம் செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து வியாழக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாரிடம் இதுபற்றிக் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து விசாரித்ததன்பேரில், அன்றே 9 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 2 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கின்றனர்.
ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த அந்த கிராம மக்கள் தினசரி கூலிகளாகவும், விவசாயமும் செய்துவருகின்றனர்.
2018ஆம் ஆண்டு அதே டோக்மோகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு இளைஞர்களை குழந்தை கடத்தல்காரர்களாக சந்தேகித்த கிராம மக்கள் அவர்களை இதேபோல் அடித்தே கொலைசெய்துள்ளனர்.
அஸ்ஸாமில் பில்லி சூனியம் செயல்கள் தொடர்வதைக் கட்டுப்படுத்த 2015ஆம் ஆண்டு அஸ்ஸாம் சூனிய வேட்டை தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டம் 2018ஆம் ஆண்டுமுதல் அமலுக்கு வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலங்களவையில் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 18 ஆண்டுகளில் 161 பேர் சூனிய செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர்.