வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு pt web
குற்றம்

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கு கடந்த வந்த பாதையும், இன்றைய தீர்ப்பு விவரமும்!

1992-ம் ஆண்டு தருமபுரி வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: விதிக்கப்பட்டிருந்த தண்டனையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Angeshwar G

1992-ம் ஆண்டு தருமபுரி வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு Vachathi

வழக்குப் பின்னணி:

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த வாச்சாத்தி மலை கிராமத்தில், 1992 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சோதனை நடத்தினர். அப்போது, கிராம மக்களை அடித்ததோடு 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு 19 ஆண்டுகள் நடந்தது.

இந்த காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

தாக்கலான மேல்முறையீட்டு மனு:

இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஏனையோருக்கு வாச்சாத்தி மக்களை துன்புறுத்தியதாக 2 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் கேட்டுவிட்டு அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

மீண்டும் வந்த விசாரணை!

முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்திக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். பின் இந்த வழக்கில் வாதங்கள் முடிந்தபின் வெள்ளிக்கிழமைக்கு (இன்று) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பின் தீர்ப்பு வழங்கினர்.

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

இன்றைய தீர்ப்பு விவரம்:

அதில்,

“பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

தொகையில் 5 லட்சத்தை குற்றம் புரிந்தவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்களை தருமபுரி மாவட்ட நீதிமன்றம் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். காவல்துறை மூலமாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது சுய தொழில் வேலை வாய்ப்புகளை தொடங்கும் வகையில் அரசு அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இந்த கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார் நீதிபதி.