குற்றம்

ஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை

ஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை

webteam

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ஆத்மநாதசுவாமி நகரில் வசிப்பவர் ஆசிரியர் அண்ணாதுரை. இவரும் இவரது மனைவியும் ஆசிரியர்கள் என்பதால் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்பிலான 70 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிந்தது. நேற்று மதியம் மழை பெய்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து திருடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல ராமநாதபுரத்தின் புறநகர் பகுதியான காரிக்கூட்டம் கிராமத்தில் நேற்றிரவு மைமூன் பீபி என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் தூங்கியிருக்கிறார். காலையில் விடிந்தவுடன் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதுபோல காரிக்கூட்டம் மைமூன் பீபியின் வீடக்கு அருகில் உள்ள அஜ்மல்கான் என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தகவல்கள் : அ.ஆனந்தன், செய்தியாளர் - ராமநாதபுரம்