ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சீனிவாச மங்காபுரத்திலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பாதையில் இன்று அதிகாலை வனச்சரகர் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது 150ஆவது படிக்கட்டிற்கு அருகில் கடத்தல்காரர்கள் சிலர் கும்பலாக சேர்ந்து செம்மரங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
அவர்களை பிடிக்க முயன்றபோது மரங்களைப் போட்டுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. கடத்தல்காரர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகள் ரூபாய் 1 கோடி மதிப்புடையவதாக ஆந்திர வனத்துறையினர் கூறியுள்ளனர். ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் வெட்டுவதற்கு தடை விதித்துள்ள நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.