கொரோனா வைரஸ்

ஒமைக்ரானை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - ஓர் பார்வை

ஒமைக்ரானை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - ஓர் பார்வை

Sinekadhara

ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்தே உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது, கொரோனா பெருந்தொற்று. இது டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்ஃபா, பீட்டா என பல திரிபுகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் திரிபு, லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் மறுத்துள்ளார். காரணம், முந்தைய திரிபுகளைப் போல ஒமைக்ரானும் மக்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைப்பதாகவும், அது மக்களின் உயிரை பறிப்பதாகவும் தெரிவித்தார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 71 விழுக்காடாகவும், அமெரிக்காவில் 100 விழுக்காடாகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஒமைக்ரான் திரிபு 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் தாக்கும் வல்லமைக் கொண்டதாக இருப்பதால், உலகம் முழுவதும் சுகாதார கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரிட்டனில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் தொற்று பரவல் அதிகம் காரணமாக கிரிட்டிக்கல் இன்சிடண்ட்ஸ், அதாவது சிகிச்சையளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பல நாடுகளில் சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதில் தடுப்பூசி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஏழை நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, அதிகளவிலான தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமாகி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புதிய தலைமுறை நியூஸ் 360 நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.