அமெரிக்காவில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இறப்பும் அதிகமாக பதிவாகிவருகிறது. கடந்த 12 நாள்களாக அமெரிக்காவில் தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து இறந்திருப்பதால், அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
ஒரு நாளில் 1000 பேர் இறப்பதென்பது, மணிக்கு 42 பேர் இறப்பதற்கு ஒப்பானது எனக்கூறியுள்ளது ரீயூட்டர்ஸ் பத்திரிகை நிறுவனம். இந்தளவுக்கு அதிகப்படியான பாதிப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தி வருவது, இந்தியாவில் இரண்டாவது அலைக்கு காரணமான அதே டெல்டா வகை கொரோனாதான். இந்த டெல்டா வகை கொரோனா, அமெரிக்காவின் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாகாணங்களிலேயே அதிகம் பரவுவதாக சொல்லப்படுகிறது.
நேற்றைய தினம் மட்டும் அமெரிக்காவில் 1,017 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,23,000 என்றாகியுள்ளது. இதன்மூலம் நாடுகள் மத்தியில் உலகளவில் அதிகப்படியாக பதிவான கொரோனா இறப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் இதற்கு முன்பு இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது, கடந்த மார்ச் மாதத்தில்தான். தற்போது ஆகஸ்ட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும், 70% கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் உயர்ந்துள்ளது.
பாதிப்பு அதிகரித்திருப்பதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு, அமெரிக்காவின் பயணக்கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடுகளுடன் சேர்த்து விமானம், ரயில், பேருந்து பயணம் என அனைத்திலுமே மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலும் நீடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, தடுப்பூசி பயன்பாட்டையும் அமெரிக்கா அதிகரித்து வருகின்றது.
உலகளவில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக அமெரிக்காவிலேயே, டெல்டா வகை கொரோனா இந்தளவுக்கு பரவுவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.