இந்தியாவில் ஒமைக்ரான் நோய் பரவல் பிப்ரவரி மாத இறுதியில் உச்சத்தை எட்டும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிரிட்டனில் ஒமைக்ரான் திரிபு வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்தியாவில் அதன் பரவல் வேகம் குறைவாகவே இருக்கும் என மத்திய அரசு அமைத்த கமிட்டியின் தலைவர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வரும் வித்யாசாகர், ஒமைக்ரான் தொற்று விவகாரத்தில் பிரிட்டனுடன், இந்தியாவை ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது என கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள்தான் பிரிட்டனில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், இந்தியாவில் அந்த வகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறினார். இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் ஓமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் உச்சத்தை எட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் லேசானது என்று நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை புரிந்து கொள்ள கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.