கொரோனா வைரஸ்

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு: திணறும் மருத்துவமனைகள்!

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு: திணறும் மருத்துவமனைகள்!

நிவேதா ஜெகராஜா

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதுமான நிரம்பியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 79 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ளது. பிற மாவட்டங்களிலும் தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 65,021 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 38,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27,021 படுக்கைகள் மீதமுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 30,635 ஆக உள்ளது. இவற்றில் 14,000 நோயாளிகள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 16,635 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், ஆக்சிஜன் படுக்கைகள் தேடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நோயாளிகள் வரத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை 11,894 படுக்கைகள் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் படுக்கைகளை பொறுத்தவரை அரசிடம் 2,629, தனியாரிடம் 2,935 என 5564 படுக்கைகள் உள்ளன. இவற்றில், அரசின் படுக்கைகள் முற்றிலும் நிரம்பிவிட்டன. தனியாரிடம் 79 படுக்கைகள் மட்டுமே மீதமுள்ளன. சென்னையில் ஒருநாளைக்கு 6,000-கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருவதால் இந்த படுக்கைகள் போதுமானதாக இருக்காது என்று தெரிகிறது.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டுமே 33,000 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 16,000 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர். மீதமுள்ள சுமார் 17,000 பேரில் 50% பேருக்கு மேல் அதாவது சுமார் 8000 பேர் வரை ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படக் கூடிய நிலை உள்ளது. தொற்று உறுதியாகி வீட்டுத்தனிமையில் உள்ளவர்களும், அறிகுறிகளை கவனிக்காமல் இருந்து திடீர் மூச்சுத்திணறல் ஏற்படுவோரும் என ஆக்சிஜன் படுக்கைகளுக்காக மருத்துவமனை வளாகங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே காத்திருக்கும் நிலை அதிகரிக்கத் தொடங்கி வருகிறது.

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இதனிடையே, தமிழகத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கூடுதலாக ஒதுக்கி, விரைந்து அனுப்பித் தருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் அளவு 440 மெட்ரிக் டன் அளவு என்ற நிலையில் தற்போது இருப்பதாக தெரிவித்துள்ளார். இது, அடுத்த இரு வாரங்களில் கூடுதலாக 400 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அடுத்த நான்கு நாட்களுக்குள் கேரளாவின் கஞ்சிகோடு பகுதியில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆக்சிஜனில் 40 மெட்ரிக் டன்னை தமிழகத்துக்கு அனுப்புமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதுரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 60 மெட்ரிக் டன்னை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அதில் 20 மெட்ரிக் டன்னை இருநாட்களுக்குள் வழங்குமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இடைக்கால தேவை கருதி ரூர்கேலாவில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜனில் 120 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை அனுப்பித்தருமாறும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்துக்கான ஆக்சிஜன் தேவை மிக மிக இக்கட்டான சூழலில் இருப்பதாகவும், 20 ஐஎஸ்ஓ கிரயோஜெனிக் கண்டெய்னர்கள் மற்றும் அதைக் கொண்டு வர ரயில்களையும் ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.