தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் காணும் பொங்கல் விழாவானது வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இன்று அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் காணும் பொங்கலை சுற்றுலாதலங்களுக்கு சென்று கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு அரசு எந்தவித தடையும் விதிக்காததால், காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை, அங்கு கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டும் இருந்தது. இதனால் புதுச்சேரி பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்து காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் புதுச்சேரி சுண்ணாம்பு ஆறு படகு குழாமில் காணும் பொங்கலை கொண்டாட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலைமுதலே குவிந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 1.91 லட்ச மருத்துவ படுக்கைகள்