இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று சமூகபரவல் நிலையை எட்டியது என்றும், மெட்ரோ நகரங்களில் பன்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் கொரோனா வைரஸ் பகுப்பாய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மத்திய அரசின் தகவலில், “ஒமைக்ரான் சமூக பரவலை எட்டியுள்ளது. மெட்ரோ நகரங்களில் வேகமாக பரவுகிறது. இதனால் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை மிக வேகமாக உயர்கிறது. இதில் BA.2 வகை திரிபு இந்தியாவில் கணிசமான அளவில் உள்ளது. எஸ் ஜீன் டிராப்அவுட் அடிப்படையிலான ஸ்கிரீனிங் அதிக தவறான பரிசோதனை முடிவுகளை கொடுக்க வாய்ப்புள்ளது” எனக்கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 10ம் தேதி மத்திய அரசின் கொரோனா வைரஸ் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, பெரும்பாலான ஒமைக்ரான் நோயாளிகளுக்கு அறிகுறிகளற்ற நிலையோ அல்லது லேசான அறிகுறியோதான் தெரிவிதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேநேரம் இந்த அலை கொரோனாவின்போதும் ஐசியூ-வில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதென்றன கூறப்பட்டிருந்தது.
சமூகப்பரவலாக ஒமைக்ரான் பரவுவதால் என்ன பயன்?
சமூகப்பரவல் என்பது ஒரே சமூகத்தில் (பகுதியில்) இருக்கும் பலருக்கு, நோய்த்தொற்று ஏற்பட்ட நபரிடம் எவ்வித நேரடி தொடர்பும் இல்லாமலும்கூட தொற்று ஏற்படும் நிலை. இது கொரோனா நோய் பரவலில் மூன்றாம் நிலை ஆகும். இந்நிலையில் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். இப்படி பலருக்கும் ஒரேநேரத்தில் தொற்று ஏற்படுகையில், எவ்வளவு பேர் பாதிப்பிலிருந்து மீள்கின்றனர் என்பதே விஷயம்.
இந்த அலை கொரோனாவில் (ஒமைக்ரானில்), குணமடைவோர் விகிதம் மிக மிக அதிகம் என்பதால், கொரோனா வைரஸூக்கு எதிரான எதிர்ப்புத் திறன் ஒரே இடத்தில் பலருக்கும் கிடைக்கும். அப்படி ஒரே இடத்தில் பலரும் நோய்க்கு எதிராகும்போது, ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நோய் பரவுதல் நின்றுவிடும். இந்த முறை நடைமுறையாக மாற சிறிது காலம் எடுக்கும் என்றாலும்கூட, இது நோய்ப் பரவுதலின் முடிவை நோக்கிய வழிக்கான தொடக்க நிலையாக இருக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதன்படி பார்க்கையில், சமூகப்பரவல் என்பது நமக்கு சாதகாமவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். பார்ப்போம்!
சமீபத்திய செய்தி: வைராக்கிய குணம்.. 5 ஆண்டுகளாக தளராத நம்பிக்கை: வாடிவாசலில் காளையுடன் மிரட்டும் மதுரை மாணவி