இந்தியா - பிரிட்டன் இடையே கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரத்தில் பிரச்னை நீடித்து வந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி முதல், இரு தவணை கோவிஷீல்டு செலுத்திய இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்து சமாதானத்துக்கு வந்திருக்கிறது.
இந்தியர்கள் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு அந்த சான்றிதழுடன் பிரிட்டன் நாட்டுக்கு பயணம் செய்தாலும் அவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு முறை கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் அளிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளிக்காதது இந்தியாவுக்கு எதிரான செயல் என இதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தது.
தொடர்புடைய செய்தி: இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை மறுக்கும் பிரிட்டன்... பதிலடி கொடுக்க இந்தியா திட்டம்
ஒருகட்டத்தில், பிரிட்டன் இந்த நடவடிக்கையால் அங்கு சென்ற இந்தியர்கள் அவதிக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து பிரிட்டனின் நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக இந்தியா - பிரிட்டன் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அவற்றை தொடர்ந்து, தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது பிரிட்டன் அரசு. அதன்படி இரு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் வரும் 11 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். கோவிஷீல்டோ அல்லது பிரிட்டன் பரிந்துரைத்த தடுப்பூசியோ இந்திய பயணிகள் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.