ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபொன்று சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருந்தது. ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்ட அந்த உருமாறிய புதிய கொரோனா திரிபின் பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக விமான நிலையங்களிலும் அப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடுதலாகியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அப்பன்னிரெண்டு நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து, மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் இருந்த மகாராஷ்டிரா வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: ”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்