நாமக்கல் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் அடுத்த கோனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ, மாணவியர் பயின்று வரும் நிலையில், 9 ஆசிரியர்கள், 18 ஆசிரியைகள் என 27 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் அன்பு ராஜிக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்ட நிலையில், தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில், ராஜேஸ்வரி மற்றும் கவிதா ஆகிய 2 ஆசிரியைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதையடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், மாணவர்களின் உடல் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.