கொரோனா வைரஸ்

கொரோனா மருத்துவமனைகளில் ஸ்மார்ட்போன்கள்... ஸ்மார்ட்டாக யோசித்த மும்பை மருத்துவர்கள்

கொரோனா மருத்துவமனைகளில் ஸ்மார்ட்போன்கள்... ஸ்மார்ட்டாக யோசித்த மும்பை மருத்துவர்கள்

Sinekadhara

மும்பையில் தற்காலிக கொரோனா மையங்கள் மற்றும் முக்கிய கொரோனா மருத்துவமனைகளில் தொற்று உடையவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பேசும் வகையில் ஸ்மார்ட்போன்களை பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது மும்பை மாநகராட்சி நிர்வாகம்.

மறுபடியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ஒருபுறம் இருக்க, நீண்ட நாட்களாக குடும்பத்தினரை சந்திக்காமல் இருப்பது மனதளவில் பாதிப்பையும், ஒருவித பதற்றத்தையும் நோயாளிகள் சந்தித்து வருவதை மருத்துவர்கள் கவனித்திருக்கின்றனர். எனவே மும்பையின் 4 முக்கிய மருத்துவமனைகளிலும், தற்காலிக மையங்களிலும் 200 ஸ்மார்ட்போன்களை நோயாகளுக்குக் கொடுத்து குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்க டிசம்பர் 15 வரை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதனால் நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன்களை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உள்ளாட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் அழைப்பு வாயிலாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அந்த முறை எளிதாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

கொரோனா நல ஆலோசகரான மோனா பர்பயா இதுகுறித்து, ’’மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளில் பலருக்கு சிறு குழந்தைகள் இருக்கின்றனர். பலருடைய பெற்றோர்கள், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை இருப்பதால் எப்போதும் தங்கள் குடும்பத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன் வசதி அவர்களை தற்போது உற்சாகப்படுத்தி இருக்கிறது’’ என்று கூறினார்.