பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பைக் மூலம் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். பல முக்கிய செக்போஸ்ட்டுகளையும் கடந்து அவர் போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்து தப்பியுள்ளார். இந்த நபரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என நினைத்த போலீஸார் பல முயற்சிகளை செய்தனர். இறுதியில் ஒருவழியாக அவரை பிடித்தனர். பிடித்தவுடன் அவருக்கு தெர்மல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு அதிக ஜூரம் இருப்பதும், உடம்பு சூடாக கொதித்ததையும் போலீஸார் அறிந்தனர்.
இதனையடுத்து போலீஸார் இவருக்கு கொரோனா அறிகுறி இருக்குமோ என்று சந்தேகமடைந்தனர். ஏன் உடம்பு இப்படி கொதிக்குது என அந்த நபரிடமே போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் "கொரோனா வைரஸ் என்னை தாக்காமல் இருக்க வோட்கா மதுபானத்தை குடித்தேன், அதனால் உடம்பு சூடாக இருக்கிறது" என தெரிவித்தார். இதனையடுத்து கடுப்பான போலீஸார் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமல் ஆல்கஹால் சோதனை நடத்தினர். பின்பு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அந்த நபருக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.
உலகின் பல்வேறு இடங்களில் மதுகுடித்தால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற தவறான நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் கள்ளச்சாரயம் குடித்து இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 600 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.