கொரோனா வைரஸ்

"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்

"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்

Sinekadhara

கொரோனா முதல் அலையைவிட 2=ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடங்கிவிடுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். 

கொரோனா வைரஸ் வாய், மூக்கு என சுவாசத்துடன் நேரடித் தொடர்புடைய உறுப்புகள் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரலை அடையும்போதுதான் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிரிழக்கும் நிலை வரை கொண்டுசென்றுவிடுகிறது. கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், 2-ஆம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக கூறுகிறார் மருத்துவர் ரவிக்குமார்.

தற்போதைய அலையில் நுரையீரல் பாதிப்பின் வேகம் அதிகரிக்க காரணம் வைரசில் ஏற்பட்டுள்ள ஏராளமான வீரியத்துடன் கூடிய மாற்றங்களே என்கின்றனர் மருத்துவர்கள். வாயில் டான்சில், மூக்கின் அருகில் அடினாய்டு , தொண்டையை சுற்றி வால் டயர்ஸ் ரிங் என்ற பாதுகாப்பு வளையங்கள் உள்ள நிலையில், பல கிருமிகள் இந்த இடத்திலேயே தாக்கி அழிக்கப்படும். ஆனால், தற்போதைய வீரியம் மிகுந்த தொற்று இந்த பாதுகாப்பு வளையத்தை எளிதில் உடைத்து வேகமாக நுரையீரலை அடைவதால் பாதிப்பும் விரைவாக ஏற்படுகிறது என்கின்றனர்.

அதேசமயம், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும் வேகத்தில் இரு அலைகளிலும் மாற்றமில்லை என்று கூறும் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், நுரையீரல் பாதிப்பை கண்டறிய சிடி ஸ்கேன் செய்யும்போது சில மாற்றங்கள் தெரிவதாகக் கூறுகிறார்.

இதுபோன்ற காரணங்களால் முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வந்தபின் காப்பதைவிட வரும் முன் காப்பதும் முகக்கவசத்தால் தற்காத்துக் கொள்வதும் இன்றைய சூழலில் அவசியமாகிறது.