கொரோனா வைரஸ்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை: நேற்று ஒரேநாளில் 1,192 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை: நேற்று ஒரேநாளில் 1,192 பேர் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் 2 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது தினசரி கொரோனா பாதிப்பு. அதேநேரம் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,67,059 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 2,09,918 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில் அது தற்போது கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பாளர்களுடன் சேர்த்து இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,14,69,499 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2.54 லட்சம் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,92,30,198 என உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 17,43,059 என குறைந்துள்ளது.

பாதிப்பு தொடர்ந்து கணிசமாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பலி எண்ணிக்கையில் பெரியளவில் வித்தியாசமில்லாமல் உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் கொரோனாவால் 959 பேர் உயிரிழந்த நிலையில், அது இன்று உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,96,242 என்று உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை காக்கும் வழியான தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை 166.68 கோடி டோஸ் தடுப்பூசி இதுவரை மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் நேற்று ஒரு நாளில் 61,45,767 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.