கொரோனா வைரஸ்

100 கோடி கொரோனோ தடுப்பூசி... - சசி தரூர் முதல் ஜகி வாசுதேவ் வரை வாழ்த்து!

100 கோடி கொரோனோ தடுப்பூசி... - சசி தரூர் முதல் ஜகி வாசுதேவ் வரை வாழ்த்து!

PT WEB

இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சாதனைக்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தலைவர்கள், பிரபலங்கள் வரை பல தரப்பினரும் பாராட்டு வழங்கி வருகின்றனர்.  

கொரோனா தொற்றை ஒழிக்க இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,27,277 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 100.59 கோடியைக் (1,00,59,04,580) கடந்தது. இது உலக அளவில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையை அடைந்துள்ள இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 100 கோடி எட்டிய இந்தியாவுக்கு கிடைத்து வரும் பாராட்டுகளில் சில...

பிரதமர் மோடி: "வாழ்த்துகள் இந்தியா. இந்த தருணம் இந்தியா மிகப்பெரிய வரலாறு படைத்திருக்கிறது. இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். 100 கோடி தடுப்பூசி என்ற சாதனையை எட்ட உதவிய மருத்துவர்கள், செவிலியர் என ஒவ்வொருவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்."

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: "இது வரலாற்றுச் சிறப்புமிக்க, பெருமையான ஒரு தருணம். 100 கோடி தடுப்பூசி என்ற சாதனை புதிய இந்தியாவின் திறன்பாட்டை, ஒட்டுமொத்த உலகத்துக்கும் வெளிக்காட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய சாதனையை அடைய உதவிய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன்."

உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதனோம்: "கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சிகளை செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்."

சசி தரூர்: "இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் இது. இந்த சாதனைக்கு மத்திய அரசைதான் பாராட்ட வேண்டும். என்றாலும், கொரோனா இரண்டாவது அலையை சரியாக நிர்வகிக்க முடியாமல் போனதை, போதுமான அளவு தடுப்பூசி இருந்திருந்தால் தடுத்திருக்கலாம். மத்திய அரசு இந்த தவறை பாதியளவு திருத்திவிட்டது. எனினும் கடந்த கால தோல்விகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்."

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: "மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தடுப்பூசி சாத்தியமா என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு 100 கோடி அளவு தடுப்பூசி செலுத்த முடியும் என்று நிரூபித்து சாதனை படைத்திருக்கிறது நம் நாடு. உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து, 100 கோடியை தாண்டி அதனை செலுத்தியதுடன் 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவி சாதனை படைத்த நாடு இந்தியா. இந்த சாதனை புரிய உதவியாக இருந்த மருத்துவ வல்லுநர்கள், செயலாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றுள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் பதிந்துள்ள ட்வீட்: "100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது. தங்களது இடையறா முயற்சிகளால் இதனை நிகழச் செய்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்‌" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: "கொரோனா தடுப்பூசி வந்தபோது அதன் நம்பகத்தன்மை கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தற்போது முழு நம்பிக்கையுடன் தடுப்பூசியை 100 கோடி மக்கள் செலுத்தியுள்ளனர். இந்த சாதனைக்கு உரித்தானவர்களை வாழ்த்துகிறேன்."

சீரம் இன்ஸ்டிட்யுட் தலைவர் ஆதார் பூனவல்லா: "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 1 பில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி என்ற சாதனையை கடந்துள்ளது. கொரோனா தொற்றுநோயை ஒழிக்க இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் அனைத்து அமைச்சகங்கள், முகவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நான் வாழ்த்துகிறேன்" என்றுள்ளார்.

இவர்களை போல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மற்ற மாநில முதல்வர்கள் உட்பட பலர் இந்தியாவின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.