ஒமைக்ரான் பரவல் காரணமாக, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று வி.கே. பால் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்புக் குழுவின் தலைவருமான வி.கே. பால் கூறுகையில், ''ஒமைக்ரான் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமான சூழலை சந்தித்து வருகின்றன. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஒரு நாள் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அதனை, அப்படியே, இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப கணித்துப் பார்த்தால், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் அவசியமின்றி பயணிப்பதை தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.