சத்தமில்லாமல் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று முதல் த்ரில் வெற்றிப்பெற்ற இந்திய அணி வரை இன்றைய முக்கிய செய்திகளை விவரிக்கிறது இந்தக்கட்டுரை.
1.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் அதிமுக வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். அதே போல முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
2. நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரை தொடர்ந்து, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்.
3. நேற்று பரப்புரைக்காக சேலம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போதுள்ள அதிமுக முன்பு இருந்தது அல்ல என விமர்சனம் செய்தார். அத்துடன் அதிமுக அணிந்திருந்த முகமூடியை அகற்றினால் உள்ளே பாஜக, ஆர்எஸ்எஸ் இருப்பது தெரியும் என்றும் கூறினார்.
4. தன் தாயை இழிவாக பேசியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நா தழுதழுக்க உருக்கமடைந்து, இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கதி என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.
5. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்தது எல்லாம் பாஜகவின் சதிவலை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் எந்த நிலையிலும் தான் மக்களுடன் இருந்து வருவதாக கூறினார். தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த அளவில் நிதி வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை எனக் கூறினார்.
6.சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கோவிலம்பாக்கம், கண்ணகி நகர், சிறுசேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
7. அரசியல் தமக்கு தொழில் அல்ல, கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியை, நாட்டிற்கே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றும் அவர் பரப்புரை செய்தார்.
8.தமிழகத்திற்கு தேவை ஆள் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ அல்ல; அரசியல் மாற்றம் தேவை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செஞ்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், இங்கு அமைப்பே சீர்கெட்டு போயிருப்பதாக குற்றம் சாட்டினார்.
9.முதல்வரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரப்புரைக்கு தடை விதிக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மீண்டும் மனு அளித்துள்ளது.
10.தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது.
11.கொரோனா பரவலால், பல இடங்களில் ஹோலி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
12.சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரமாண்ட சரக்கு கப்பலை மீட்கும் பணி 7ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளது. 14 இழுவை படகுகள் மூலம் கப்பலை அகற்றும் பணி தொடர்கிறது.
13. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.