கொரோனா வைரஸ்

டெல்லி கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்

டெல்லி கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்

நிவேதா ஜெகராஜா

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் டெல்லியில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே அங்கு மஞ்சள் எச்சரிக்கை அளவை கொரோனா எட்டிய சூழலில், மெட்ரோ சேவையில் கட்டுப்பாடு - உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தினசரி பாதிப்பின் சதவீதம் 6.5 என உயர்ந்து இருப்பதால் வரும் நாட்களில் பாதிப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டுதான், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தின் முடிவில், டெல்லியில் பாதிப்பின் அளவு சிகப்பு எச்சரிக்கை அளவை எட்டும் பட்சத்தில் மேற்கொண்டு விதிக்கப்பட வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.