கொரோனா வைரஸ்

கொரோனா எதிரொலி: டெல்லியில் ‘வார இறுதி நாள்களில்’ முழு ஊரடங்கு அமல்

கொரோனா எதிரொலி: டெல்லியில் ‘வார இறுதி நாள்களில்’ முழு ஊரடங்கு அமல்

நிவேதா ஜெகராஜா

டெல்லியில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த வாரத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. ஆகவே அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் கொரோனா தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலையான அங்கு கடந்த ஜூலை மாதத்தில்தான் கொரானா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின் 5 மாதங்களாக கொரோனா பாதிப்புகள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது.

சிறை அதிகாரிகள் 6 பேருக்கும் கைதிகள் 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாதிப்பு ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இவையன்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றுப்பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆலோசனைக்கூட்டம், அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தலைமையில் இன்று நடந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் வார இறுதி நாள்களில், அதாவது வெள்ளிக்கிழமைகளின் இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மற்றும் தேவைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ‘மக்கள் அத்தியாவசிய தேவையன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கட்டாயம் அலுவலகம் வரும் சூழலில்லாத அரசு அதிகாரிகள், வீட்டிலிருந்தே பணிபுரியலாம். அனைத்து இடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதால் மெட்ரோ மற்றும் பேருந்துகளில், இருக்கை வசதிக் கட்டுப்பாடு ஏதுமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.