சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அங்கு பொதுஇடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு சீனா இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவின் வூகான் நகராகும். சீனாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த நகரை உள்ளடக்கிய ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக இந்த நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்திற்குப் பிறகு, முதன்முறையாக வீடுகளை விட்டு வெளியேறுவதாக பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வருகின்றனர்.
கொரோனாவின் எதிரொலியாக முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த போக்குவரத்து ஹுபே மாகாணத்தில் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. Wuxue மற்றும் Huangshi நகரங்களை இணைக்கும் யாங்ஸே நதி பாலத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கின. ஸின்டாவோ நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 70 சதவிகிதம் வரை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க கிரீஸ் நாட்டுக்குத் தேவையான முகக்கவசங்களை சீனா ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 10 லட்சம் முகக்கவசங்களை தனி விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து கிரீஸ் நாட்டின் ஏதன்ஸ் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் அனைவரும் முன்னெச்சரிக்கை உணர்வுடனேயே காணப்படுகின்றனர்.
வெளியில் இருந்த நபர்களால் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோர் வெளிநாட்டினரா? அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் சீன குடிமக்களா? என்ற தகவலை சீன சுகாதார நிறுவனம் வெளியிடவில்லை.