பிரிட்டனின் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை விடவும் மேலானது இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் என கூறியுள்ளார் நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த்.
முன்னதாக 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு அந்த சான்றிதழுடன் பிரிட்டன் நாட்டுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு முறை கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரிட்டன் அரசு சில உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, ‘பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸினிக்கா (இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்படுவது) தடுப்பூசிதான் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது எனும்போது, தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை ஏன் பிரிட்டன் அரசு அங்கீகரிக்க மறுக்கிறது?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவின் இந்த கேள்விக்குப் பிறகு, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்தது.
தொடர்புடைய செய்தி: இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை மறுக்கும் பிரிட்டன்... பதிலடி கொடுக்க இந்தியா திட்டம்
ஆனாலும் இந்தியாவின் சான்றிதழ்களை ஏற்க மறுக்கிறது. இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு சான்றிதழ் ஆதாரம் அளித்தாலும் 10 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதிலிருந்து பிரிட்டன் பின்வாங்கவில்லை. இதன் பின்னணியாக பிரிட்டன் அரசு, ‘போலி சான்றிதழ்களை பயன்படுத்தி தனிமைப்படுத்துதல் விதியிலிருந்து விலக்கு பெற சில பயணிகள் முயற்சி செய்கின்றனர். அதை தடுக்கவே இது செய்யப்படுகிறது’ என்று கூறியது. எனில் இந்தியாவில் தடுப்பூசி சான்றிதழ்கள் தரமற்று இருக்கிறதா எனக்கூறி, பிரிட்டன் அரசுக்கு தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தில் தலையிட்டு, ‘பிரிட்டன் அரசு, தாமதமின்றி இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க வேண்டும். உலக நாடுகளுடன் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களையே இந்தியா விரும்புகிறது’ என கூறினார். மோடியுடன் இணைந்து பலரும் இக்கருத்துகளை வலியுறுத்திவருகின்றனர். அதனொரு பகுதியாகவே, நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் ட்விட்டரில் அதை முன்மொழிந்துள்ளார். உடன் அவர் பிரிட்டன் அரசுக்கு தனது எதிர்ப்பையும் பதிவிட்டுள்ளார்.
தனது ட்வீட் மூலம் அமிதாப் காந்த் வலியுறுத்தியுள்ளவை: "இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் திட்டமானது, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வலுவான டிஜிட்டல் தளமான கோவின் மூலம் இயக்கப்படுகிறது. இத்தளம், உடனுக்குடன் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை உருவாக்கும். மேலும் சான்றிதழ்கள் சரிபார்க்கும். உடன் சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண்ணும் இதில் இணைக்கப்படும் என்பதால் பாதுகாப்புக்கு அச்சமேயில்லை. இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் அளிக்கும் முறை தடையற்ற செயல்முறை கொண்டது. இப்படியாக இந்திய தடுப்பூசி தளம், இங்கிலாந்தை விட சிறப்பான முறையில் செயல்படுகிறது.”
இந்திய சான்றிதழ்களை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால், பதிலடியாக இந்திய அரசு பிரிட்டிஷ் சான்றிதழ்களை நிராகரிக்கும் என சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ள பிரிட்டிஷ் அரசு, அடுத்தகட்டமாக இந்திய சான்றிதழ்களை அங்கீகாரம் அளித்து, தனிமைப்படுத்துதல் விதியை நீக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- கணபதி சுப்ரமணியம்