கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு உடலில் ஏற்பட்ட கடுமையான எதிர்விளைவுகள் காரணமாக, தடுப்பூசி சோதனையை நிறுத்தியுள்ளது ஆக்ஸ்போர்ட்டின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம்.
மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் உலகளாவிய சோதனைகளை நிறுத்தியுள்ளது, ஏனெனில் தடுப்பூசி செலுத்தப்பட்டவருக்கு கடுமையான எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வினை நேரடியாக நிறுவனத்தின் தடுப்பூசியால் ஏற்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை.
உலகளவில் ஏற்கனவே 8,90,000 க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்க பல்வேறு மருந்து நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இச்சூழலில் முன்னணி மருந்து நிறுவமான அஸ்ட்ராஜெனகா இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி தயார் செய்யப்பட வேண்டும் என்று பல கட்ட முயற்சிகளில் இருந்தது. ஆனால் தற்போதை தடுப்பூசி எதிர்வினைகள் காரணமாக இச்சோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் பிலிஸ் டைன் கூறுகையில், “ இந்த எதிர்விளைவுகள் தடுப்பூசியுடன் நேரடியாக தொடர்புடையதா இல்லையா என்பதை பாதுகாப்பு வாரியம் கண்டுபிடிக்கும் வரை தடுப்பூசி சோதனையை நிறுத்துவது நல்ல யோசனையாகும்.” என்று கூறியுள்ளார். நிறுவனங்கள் மேற்பார்வையிடும் இதுபோன்ற பெரிய சோதனைகளில், பங்கேற்பாளர்கள் சில சமயங்களில் தற்செயலாக நோய்வாய்ப்படுகிறார்கள் "ஆனால் இதை கவனமாக சரிபார்த்து நேர்மையுடன் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்று நிறுவனம் கூறியது.
நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் தினத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு பலமுறை அழுத்தம் கொடுத்துவரும் சூழலில் இந்த சிக்கல் எழுந்துள்ளது.