விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள இல்லோடு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இல்லோடு கிராமத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரி ஒருவருடைய மகன் சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை அரசு அறிவித்தபடி 3,131 பேருக்கு கொரோனா இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர், அரசு மருத்துவமனை செவிலியர் 3 பேர், காவலர்கள் 3 பேர் உள்ளிட்ட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,243 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.