கொரோனா வைரஸ்

“கொரோனா 3வது அலையின் ஆரம்ப கட்டத்தில் உலகம் உள்ளது” - எச்சரிக்கும் WHO

“கொரோனா 3வது அலையின் ஆரம்ப கட்டத்தில் உலகம் உள்ளது” - எச்சரிக்கும் WHO

நிவேதா ஜெகராஜா

உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,“ அதிகப்படியான தளர்வுகளால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனர். இக்காரணங்களால் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் உலகளவில் மீண்டுமொரு முறை அதிகரிக்கிறது. 

கொரோனா திரிபை பொறுத்தவரை, இன்னும் பல கொரோனா திரிபுகள் இனிவரும் நாட்களில் உருவாகலாம். தற்போது 111 நாடுகளில் பரவியிருக்கும் டெல்டா வகை கொரோனா திரிபு இன்னும் வேகமாக உலகம் முழுவதும் விரைவில் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

மேலும் பேசியபோது, “கடந்த சில வாரங்களாக தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்பட்டதால் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கொரோனா புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையும் இறப்பும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் உலக அளவில் அவை தற்போது ஏற்றமடைவதை தரவுகளின் வழியாக தெரிந்துக்கொள்ள முடிகிறது. கடந்த 10 வாரங்களாக குறைந்துவந்த உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துவது அவசியம். ஆனால் தடுப்பூசி  மட்டுமே கொரோனாவை தடுக்காது. உடன், கூட்டம் கூடுதலை தவிர்ப்பது - சரியாக வழிமுறைகளை கையாள்வது போன்றவை மிக மிக அவசியம். தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக, பணக்கார நாடுகள் யாவும், தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து பாதுகாப்புடன் தளர்வுகளை அதிகப்படுத்தி வருகிறது. இதுவே ஏழை நாடுகளை பார்த்தால் தடுப்பூசி கிடைக்காததால் கொரோனாவே அவர்களின்மீது கருணை காட்டினால் மட்டுமே தப்பிக்க இயலும் என்ற நிலையில் உள்ளனர். இந்த இருவழி கையாளுதலை சரிசெய்ய, கொரோனா தடுப்பூசி விநியோகத்தை உலகளாவிய அளவில் உடனடியாக அதிகப்படுத்த வேண்டும்.

அனைத்து நாடுகளும் செப்டம்பர் இறுதிக்குள் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10% பேருக்காவது செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 2021 முடிவதற்குள் குறைந்தபட்சம் 40% பேருக்கும், 2022 ம் ஆண்டு பாதிக்குள் 70% பேருக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஓரளவாவது சமாளிக்க இயலும்” என்றார்.