சினிமா

அரசியல் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஒரு கோமாளி, மொத்த ஆட்டத்தையும் மாற்றினால்? அதுவே 'பபூன்'

அரசியல் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஒரு கோமாளி, மொத்த ஆட்டத்தையும் மாற்றினால்? அதுவே 'பபூன்'

webteam

கடத்தல் மன்னன் தனபால் (ஜோஜூ ஜார்ஜ்) உதவியுடன் கடல் வழியாக போதைப் பொருட்களை கடத்தி பெரும் பலத்துடன் வளர்கிறார் ரங்கராஜன் (ஆடுகளம் நரேன்). இவரின் வளர்ச்சி அவர் சார்ந்த கட்சியின் தலைமைக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது அவரை அழிக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது. இன்னொரு பக்கம் ஊர் திருவிழாக்களில் கூத்து கட்டி தங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் குமரன் (வைபவ்), முத்தையா (ஆந்தக்குடி இளையராஜா). இந்த வருமானம் போதாது என வெளிநாட்டுக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்கள் வைபவும், இளையராஜாவும். அதற்கு பணம் தேவைப்பட லோடு லாரி ஓட்டுனராக பணியில் சேர்கிறார்கள். திடீரென ஒரு இரவில் நடக்கும் சம்பவம் இந்த இருவரையும் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. யாருக்கோ வீசப்பட்ட அரசியல் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டது புரிந்ததும் அதில் இருந்து தப்ப நினைக்கிறார்கள். என்ன பிரச்சனை? அதிலிருந்து இருவரும் தப்பினார்களா? என்பதுதான் கதை.

படத்தின் ஒன்லைன் கேட்கும் போது முழுக்க முழுக்க காமெடி படமாக தோன்றலாம். ஆனால் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் அதில் ஆங்காங்கே அரசியலையும் பேசியிருக்கிறார் இயக்குநர் அஷோக் வீரப்பன். படம் துவங்கி கொஞ்ச நேரம் தடுமாறினாலும், செக் போஸ்ட் காட்சிக்குப் பிறகு வேகமெடுக்கிறது.

நாயகன் வைபவ் எப்போதும் போல் ஒரு டீசண்டான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தான் சிக்கியிருக்கும் ஆபத்தை உணரும் இடங்களில் அவரின் நடிப்பு கவனிக்கும்படி இருந்தது. அவரின் நண்பனாக வரும் இளையராஜா சொல்லும் கவுண்டர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. நாயகியாக அனகா, ஈழத்தமிழராக வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம். அந்த வலியை வெளிப்படுத்தும் இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி நம்மைக் கவர்வது, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் தமிழரசன். அரசியல் வாதிகளின் பர்சனல் பகைக்காக பயன்படுத்தப்படும் வெறுப்பும், தன்னிடம் இருந்து தப்பியவர்களைப் பிடிக்க நினைக்கும் கோபமும், இறுதிக்காட்சியில் எதார்தத்தை பேசுவது எனப் பல இடங்களில் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பும் படத்தின் ஹைலைட்டில் ஒன்று.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு படத்தின் பல காட்சிகளை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. தேவையிலாத காட்சிகள் இல்லாத படி படத்தின் தன்மைக்கு ஏற்ப தொகுத்திருக்கும் எடிட்டர் வெற்றி கிருஷ்ணனும் நன்றாக பணியாற்றியிருக்கிறார்.

படத்தின் பிரச்சனை எனப் பார்த்தால், ஒரு சினிமாவுக்கான பரபரப்பு படத்தில் இல்லை என்பதுதான். கதை சொல்லப்படும் விதமும் நம்மை அந்தக் கதைக்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. நாடக கலைஞர்கள், அரசியல்வாதிகளின் அதிகார போட்டி, ஈழத்தமிழர்கள், போதைப் பொருள் கடத்தல் என ஒரே கதைக்குள் பல விஷயங்களை வைத்தது சரி. ஆனால் அவை கதைக்குள் இயல்பாக பொருந்தி வரவில்லை. பிரச்சனையில் சிக்கிய பிறகு வீட்டில் இருந்து பணம் வாங்கி தப்பிக்கும் நண்பர்கள், அந்தப் பணத்தை முன்பே வாங்கியிருந்தால் சுலபமாக வெளிநாடு சென்றிருக்கலாமே என்ற லாஜிக் கேள்வியும் இடிக்கிறது.

எழுத்தில் இன்னும் கூட கவனம் செலுத்தியிருந்தால், மிகவும் கவனிக்கப்படும் படமாக மாறியிருப்பான் இந்த பபூன்.

-ஜான்சன்