இந்த வருடத்தில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விஷயம் எது என்பதை அறிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க ட்விட்டர் இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் ‘விஸ்வாசம்’ என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதேசமயம், இந்த வருடம் முடிவதற்குள் எப்படி இந்த முடிவிற்கு வர முடியும் ? என்ற கேள்வியை சிலர் எழுப்பினர்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக ட்விட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘நீங்கள் இந்த ட்விட்டிற்காக மகிழ்ச்சியடைவதைக் கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் உபயோகிக்கப்பட்ட சில மொமண்ட்ஸ்கள் ஆகும். நீங்கள் அனைவரும் இந்த வருடத்தில் அதிகம் ட்வீட்டுகள் செய்யப்பட்ட விஷயம் எது என்பதை அறிந்துகொள்ள இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் முதலிடம் பிடித்ததாக பகிரப்படும் செய்தியானது , இந்த ஆண்டில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு பற்றியது என்றும், அதிக ட்வீட்டுகள் தொடர்பானது இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.