சரியான படங்கள் அமையவில்லை என்ற விரக்தியில் இருந்தேன் என்று நடிகர் விக்ராந்த் கூறியிருக்கிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்காக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘சினிமா வாழ்க்கையில் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம். சுசீந்திரனை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம்.அவர் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைத்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவர் எனக்கு சகோதரர் மாதிரி. அவருக்கு நான் மிகமிக கடமைபட்டுள்ளேன். சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்க தயார்.”என்றவர் கொஞ்சம் பழைய விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்தார்.
‘‘நடுவில் படங்கள் சரியாக அமையவில்லை என்ற விரக்தியில் இருந்தேன். அதனால் அதிக எடை கூடிவிட்டேன்.அதை குறைக்க தினமும் ஓட ஆரபித்தேன். அந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது.அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம்.முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார்.அவருக்கு பதில் நீதான். மற்ற நடிகர்கள் எல்லாம் பழைய நடிகர்களே நடிக்கிறார்கள் என்றார். வெண்ணிலா கபடிக்குழு 2க்காக முறையாக கபடி கற்று வருகிறேன்.
வெண்ணிலா கபடிக் குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.
மல்டி ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க வேண்டும் என விரும்பி இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடிக்குழு 2 கிடைத்தது மகிழ்ச்சி. பாண்டிய நாடு படத்தை பார்த்துவிட்டு பாலா சார் என்னை தொலைபேசியில் அழைத்து இதேபோன்று உன் நடிப்பு திறமை தொடர வேண்டும் என்று ஊக்குவித்தார். அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் என்னை வேலை செய்ய தூண்டுகிறது. இனி கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன்” என்றார்.