நெல்லையில் செல்போன் கடை திறப்பு விழாவுக்குச் சென்ற ‘குக் வித் கோமாளி’ புகழைக் காண கொரோனா சூழலில் கூட்டம் கூடியதால், அந்தக் கடை சுகாதாரத்துறை அதிகாரிகளால் மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் வண்ணாரபேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவுக்கு இன்று விஜய் டிவியின் குத்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிக்கும் புகழ் வருகை தந்திருந்தார். அவரைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு அதிகமாக கூடியிருந்தனர். தற்போது, கொரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கொரானா வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புகழைக் காண செல்போன் கடைக்கு வந்திருந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு கொரோனா விதிகளை மீறியதாக கூறி கடைக்கு சீல் வைத்தனர்.