சினிமா

’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி

’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி

webteam

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நடிப்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீர்ர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். அதுபற்றி விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, ’’சின்ன வயதில் இருந்தே நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனை சந்தித்தபோது நான் அவரிடம் இதைச் சொன்னேன். என் நண்பர்கள் என்னை பந்துபொறுக்கத்தான் விளையாட்டில் சேர்ப்பார்கள். கிரிக்கெட்டின் அடிப்படை கூட முழுதாக எனக்குத் தெரியாது. இந்தப் படம் முழுக்க கிரிக் கெட்டை பற்றியது அல்ல, அவரது வாழ்க்கையும் முக்கியமான அங்கமாக இருக்கும். என்மீது அன்பு வைப்பவர்கள் யாரையும் நான் இழக்கமாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சிக் கூட இந்தப் படத்தில் இருக்காது.

என் மீது அன்பு செலுத்துகிறவர்களை காயப்படுத்தும் வேலையை நான் எப்படி செய்வேன்? நான் அவ்வளவு சுயநலமான ஆள் இல்லை. இதையும் மீறி காயப்படுத்துவது போல் நடந்துகொண்டால், சின்ன குழந்தையாக இருந்தால் கூட மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டேன்’’ என்றார்.  

ஷாரூக் கான் அவரை பாராட்டியது பற்றி கேட்டபோது, ‘’ஆஸ்திரேலியாவில் நடந்த விருது விழாவில் ஷாரூக் கானுக்கு அருகில் என்னை அமர வைத்தார்கள். அப்போது என்னைக் கட்டிப்பிடித்த ஷாரூக், ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க’ என்று சொன்னார். நான் மகிழ்ச்சி அடைந்தேன். மேடை நாகரிகத்திற்காக அப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால், விழா முடிந்து செல்லும்போது, ‘நான் சும்மா விளையாட்டுக் கெல்லாம் சொல்லல. உண்மையாவே நீங்க நல்லா நடிக்கிறீங்க’ என்று சொன்னார். நான் நெகிழ்ந்துவிட்டேன்’’என்றார்.