சினிமா

’விக்ரம்’ பட பாணியில் விஜய் ஃபேன்ஸ்க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! ஃப்யர் மோடில் லோகேஷ்

’விக்ரம்’ பட பாணியில் விஜய் ஃபேன்ஸ்க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! ஃப்யர் மோடில் லோகேஷ்

சங்கீதா

விஜய் - லோகேஷ் கனகராஜ் - லலித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது வம்சி பைடிபள்ளியின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளநிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

சத்தமில்லாமல் நடந்த தளபதி 67 பூஜை!

இருவரும் இணையும் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று சென்னை ஏவி.எம்.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

விஜய்யின் 67-வது படம் என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 67’ என்றுப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’, ‘காத்து வாக்குல இரண்டு காதல்’, ‘கோப்ரா’, ‘மஹான்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸின் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிக்கிறார். ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ், - லலித்குமார் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்திற்கும் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த 4 நாட்கள் பட அறிவிப்புக்கான டீசர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். விக்ரம் படம் தொடங்கிய நேரத்தில் கமலை வைத்து ஒரு போட்டோ சூட்டும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பந்தி பரிமாறுவது போல் ஒரு ப்ரமோ வீடியோவும் வெளியிட்டு இருந்தார்கள். விக்ரம் படத்தைப் போலவே தளபதி 67-க்கும் ப்ரமோ ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக போட்டோ சூட் ஒன்றும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எல்லாம் முடிந்த பின்னர் மொத்தமாக விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் வெளியாக உள்ளது. விக்ரம் படத்தின் அந்த ப்ரமோவே செம்ம மாஸாக எடுத்து இருந்தார்கள். நிச்சயம் அதேபோல் விஜய் ரசிகர்களை மனதில் வைத்து லோகேஷ் ஸ்பெஷலாக ஏதேனும் செய்வார் என்றே தெரிகிறது. 

லோகேஷ் சினிமா யுனிவெர்ஸ் உண்டா?

மாஸ்டர் படம் பாதி விஜய் ரசிகர்களை மனதில் வைத்தும், பாதி தன்னுடைய பாணியிலும் எடுத்ததாக கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதனால், இந்தப் படம் முழுமையாக லோகேஷ் பாணியில் இருக்கும் என்றே தெரிகிறது. விக்ரம் திரைப்படம் லோகஷ் பாணியில் எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வெற்றி பெற்றதாக அப்போது பேசப்பட்டது. அதேபோல், எல்.சி.யு எனும் லோகேஷ் சினிமா யுனிவெர்ஸ் இந்தப் படத்திலும் தொடருமா? இல்லையா என்பது குறித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் பெரும்பாலும் லோகேஷின் முந்தைய படத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றே கூறி வருகிறார்கள்.

14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் இணையும் த்ரிஷா!

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து, கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய 4 படங்களில் நடித்துள்ளனர். இதில் கில்லி படம் சூப்பர் ஹிட் அடித்தது. திருப்பாச்சி படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான். ஆனால், குருவி, ஆதி இரண்டும் படுதோல்வியை சந்தித்த திரைப்படங்கள். விஜய்யும் த்ரிஷாவும் 14 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.