வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் 2-ஆம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்படத்தில் கமல் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 120 பக்கங்களுக்கு மேல் திரைக்கதை எழுதப்பட்டு தம்மிடம் தயாராக இருப்பதாகவும் விரைவில் படம் பற்றிய விரிவான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மாபெரும் வெற்றி பெற்று இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதிலும், ‘என் கண்ணு வேணுமானு கேட்டியாமே, எடுத்துக்கோ’ என கமல் சொல்லும் வசனம் பட்டிதொட்டி எங்கும் பரவியது குறிப்படத்தக்கது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் - 2 படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகத்திலும் கமல்ஹாசனே நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.