பிழைக்க வழி தேடும் முத்து என்ற இளைஞன் சென்று சேரும் இடம் எது என்பதே 'வெந்து தணிந்தது காடு' பட ஒன்லைன்.
தாய், தங்கையை காக்க, தன் குடும்பத்தின் மீதான கடனை அடைக்க கடுமையாக வேலை செய்கிறார் முத்து (சிம்பு). ஆனால் உள்ளூரில் சில பிரச்சனை வளர்கிறது, கூடவே கிடைக்கும் பணமும் பெரிய அளவில் இல்லை என்பதால் சிம்புவை வெளியூருக்கு அனுப்ப நினைக்கிறார் அம்மா ராதிகா. உறவினரின் உதவியுடன் மும்பையில் உள்ள பரோட்டா கடைக்கு வேலைக்கு செல்கிறார் சிம்பு. முதலில் பரோட்டா கடையாக இருக்கும் இடம், மெல்ல மெல்ல தன் முகமூடியை கழற்றி கூலிப்படையினரின் கூடாரம் என்ற உண்மை முகத்தை காட்டுகிறது.
வாழ வழி இல்லாமல் வந்துவிட்டோம் விதியே என வாழ்க்கை போகும் போக்கில் செல்லகிறார் சிம்பு. மும்பையில் சிம்பு இருக்கும் கும்பலின் தலைவன் கர்ஜி, எதிர் கும்பலின் தலைவன் குட்டி பாய் (சித்திக்) இருவருக்கும் இடையிலான மோதல் ஒரு பக்கம், யார் முன்னும் தலை தாழ்த்தி வாழக்கூடாது என நினைக்கும் சிம்பு வாழ்வில் என்ன நிகழ்கிறது? என்பது இன்னொரு பக்கம்.
இதற்கு முன் கேக்ஸ்டர் வகைப் படங்களில் நாம் பார்த்த கதை, காட்சிகள் தான். ஆனால் அதை எந்த சுவாரஸ்யக்குறைவும் இன்றி சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன். மெதுவாகத் நகரத் தொடங்கும் கதையும், காட்சியும் கூட எந்த வகையிலும் தொந்தரவாக இல்லை.
நடிகர் சிம்பு ஒற்றை ஆளாக படத்தை தாங்குகிறார். தூத்துக்குடி பாஷையில் பேசுவதாகட்டும், ஒரு இளைஞனின் உருவ அமைப்பை தோற்றத்திலும், நடிப்பிலும் அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார். மாஸ் ஹீரோவுக்கான பில்டப், பன்ச் வசனங்கள் என எதுவும் இல்லாமல் ஒரு இயல்பான மனிதனாக நாயகனைக் காட்டியிருப்பது கதையை நம்பும்படி சொல்ல உதவி இருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கும் சிம்புவுக்கு பாராட்டுகள். நகரத்தை வியப்புடன் பார்ப்பது, சித்தி இதானியை முதன் முதலில் சந்திக்கும் போது காட்டும் தயக்கம், கர்ஜி சம்பந்தப்பட்ட காட்சிகளில் பதற்றம், கோபம் என நிறைய எமோஷன்களைக் கடத்தும் பொறுப்பு சிம்புவுக்கு அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக சித்தி இத்னானிக்கு சில காட்சிகள் தான் என்றாலும் கவனிக்க வைக்கிறார். ஆனால் டப்பிங் மட்டும் பொருந்தாமல் சொதப்பி இருக்கிறது. நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, சித்திக் என முக்கியமான பாத்திரங்களில் வரும் பலரும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ராதிகாவின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தாலும், அந்த வட்டார வழக்கை இன்னும் கூட சிறப்பாக பேசியிருக்காலாம் என்ற உணர்வே வருகிறது.
படம் முழுக்க அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்வதிலும், கதாபாத்திரங்களை பதிய வைப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் இயக்குநர் கௌதம் மேனனும், எழுத்தாளர் ஜெயமோகனும். படத்தின் பலமும், ஒருவகையில் பலவீனமும் கூட அதுதான் எனலாம். படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் எந்த சோர்வையும் தராமல் இயல்பாக நகர்கிறது. முத்து என்ற தனிமனிதனின் வாழ்வில் என்ன எல்லாம் நடக்கிறது என்ற லைவ்லியான கதை சொல்லல் உடன் இருந்து பார்க்கும் அனுபவத்தை தருகிறது. ஆனால், முத்து என்ற கதாபாத்திரத்தின் வாழ்வில் நிகழும் முக்கியமான தருணங்கள் கூட மிக சாதாரணமாகவே கடந்து போகிறது. அது பார்வையாளர்களுக்கு வியப்பையோ, திடுக்கிடலையோ தராமல் நகர்கிறது.
சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு, ராஜீவனின் கலை இயக்கமும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இசக்கி பரோட்டா கடை உட்பட பல இடங்களில் செட் எது என தெரியாத அளவுக்கான உழைப்பைப் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் இன்னொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும். மறக்குமா நெஞ்சம், மல்லி பூ போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன. உன்ன நினைச்சதும் பாடல் கேட்க இனிமையாக இருந்தாலும், படத்தில் அது வரும் இடம் அத்தனை பொருத்தமாக இல்லை. சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதத்திலும், பெரிய சாகசங்களை வைக்காமல் இயல்பாக அமைத்திருந்த விதம் சிறப்பு.
துண்டு துண்டாக ரசிக்க பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு கோர்வையாக பார்க்கும் போது பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் மிக ஃபளாட்டான ஒரு கதையாக நகர்கிறது படம். அது கூட பெரிய பிரச்சனை இல்லை, முத்து தவிர கதாபாத்திரங்களின் மன ஓட்டம் கதைக்குள் பிரதிபலிக்கவில்லை. அதிகாரத்திற்கான சதிகளும் சண்டைகளும் பின்னால் இருக்கும் மனித உளவியலும், தெரியாமல் வன்முறை பாதைக்குள் வந்துவிட்டவர்கள் வெளியே செல்லமுடியாமல் தவிப்பவர்களின் மனநிலையை இன்னும் கூட அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தக் கதையின் முடிவாக வரும் இடம் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். படத்தின் இறுதியில், இரண்டாம் பாகத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் லீடும், ஏதோ அவசர கதியில் படமாக்கப்பட்டு சேர்த்து போல் இருந்தது.
கௌதம் மேனன் கண்டிப்பாக தனது கம்ஃபோர்ட் ஸோனில் இருந்து விலகி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். அதை முடிந்த வரை சுவாரஸ்யமாக கொடுக்கவும் முயன்றிருக்கிறார். ஆனால் படத்தில் முழுமையும் இருந்திருந்தால் மிக சிறப்பான ஒரு கேங்க்ஸ்டர் படமாக கவனிக்கப்பட்டிருக்கும்.
-ஜான்சன்