சினிமா

“எனக்கும் அப்படி நடந்தது; நான் ‘நோ’ சொல்லிவிட்டேன்” - வரலக்ஷ்மி ஓபன் டாக்

“எனக்கும் அப்படி நடந்தது; நான் ‘நோ’ சொல்லிவிட்டேன்” - வரலக்ஷ்மி ஓபன் டாக்

webteam

வரலக்ஷ்மி சரத்குமார் தன்னை படத்தில் நடிக்க வைப்பதற்காக சிலர் பாலியல் ரீதியாக தவறாக அணுகியதைத் தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி. இவர் சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த ‘தாரை தப்பட்டை’ பரவலான கவனத்தை அடைந்தது. ‘சத்யா’, ‘சண்டகோலி2’ , ‘சர்கார்’, ‘மாரி2’ எனப் பல படங்களில் மிகத் தைரியமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். சினிமாவை தாண்டி வெளி உலகத்திலும் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு தைரியமான பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றம், சமூக பிரச்னை சார்ந்த கருத்துகள் எனப் பல தளங்களில் பன்முகம் காட்டி வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.

இதுவரை இவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆரம்பக் காலங்களில் தன்னை நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பாலியல் ரீதியாக அவர் சில விஷயங்களுக்கு சம்மதிக்க வேண்டும் எனச் சிலர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல் திரைத்துறையினரைத் தாண்டி இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே துணை நடிகைகள் பாலியல் ரீதியாக கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவதாக புகார்கள் வெளியாகி இருந்தாலும் ஒரு முன்னணி நடிகைக்கே அவ்வாறு நடந்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இது குறித்து வரலக்ஷ்மி சரத்குமார், “எனக்கு அதே மாதிரியான பிரச்னை வந்தது. ஆனால் அதை எதிர்த்து நான் வெளியே பேசினேன். நான் இதைப்போன்ற விஷயங்களை நிறையச் சந்தித்தேன். ஆனால் நான் அதை எல்லாம் கேட்ட பிறகு நான் சொன்னது என்னவோ முடியாது என்பதைத்தான். இதற்கே சரத்குமார் என்ற பெரிய நடிகரின் மகள் என்பதை அறிந்த பிறகும் இது நடந்தது. என்னிடம் அதற்கான தொலைப்பேசி பதிவுகளே இருக்கின்றன. நான் அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை அப்படியே கேட்டுள்ளேன். ‘இவர்கள் எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள். தயாரிப்பாளர் மற்றும் ஹீரோக்களுடன் எல்லாம் போய் இருக்கவேண்டும்.

ஆனால், இவர்கள் இருக்கமாட்டார்கள்’ என்றே பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு நான் சொன்னேன், ‘எனக்கு அந்தப் படம் தேவையில்ல’ என்று. பெண்கள் முதலில் அதற்கு மறுப்பு சொல்ல வேண்டும். நான் அப்படிச் சொல்ல தாமதமானது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதனால் சிலர் என்னைத் தேர்வு செய்ய மறுத்தார்கள். நிறையப் பேர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் பிரச்னை இல்லை. இன்று நான் 25 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இவரது பேட்டிக்கு நடிகை ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில், “நன்றாக சொன்னாய் வரு, உனக்கு பலம் அதிகம்” எனக் கூறியுள்ளார்.