சினிமா

‘பூவே இளைய பூவே...’ இதயங்களில் இதம் சேர்த்த மலேசியா வாசுதேவனின் நினைவுதினம்...!

‘பூவே இளைய பூவே...’ இதயங்களில் இதம் சேர்த்த மலேசியா வாசுதேவனின் நினைவுதினம்...!

subramani

எத்தனையோ பாடகர்கள் வருவதுண்டு போவதுண்டு. ஆனால் சிலரது குரலை மட்டும் காலமானது காலா காலத்திற்கும் தன்னுள் பதப்படுத்தி வைத்திருக்கும். அப்படியொரு குரலுக்கு சொந்தக்காரர் தான் மலேசியா வாசுதேவன்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலேசியா வாசுதேவன் 1944’ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15’ம் தேதி பாலக்காட்டில் பிறந்தார். அவரது இளம்வயதிலேயே பெற்றோர் மலேசியாவுக்கு குடிபெயர்ந்தனர்., அதுவே பின்னாளில் அவரது அடைமொழியாகிப் போனது.

1972’ஆம் ஆண்டு ‘டில்லி டூ மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தில் ‘‘பாலு விக்கிற பத்மா... உன் பாலு ரொம்ப சுத்தமா...’’ என்ற தனது முதல் பாடலைப் பாடினார். பிறகு சிலகாலம் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் காலம் அவருக்குத் தகுதியான பல வாய்ப்புகளை பின்னாட்களில் கொடுத்தது.

பதினாறு வயதினிலே படத்தில் வரும் ‘ஆட்டு குட்டி முட்டையிட்டு...’ என்ற பாடலை பாடுவதற்கு முதலில் தேர்வானது எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்., ஆனால் அப்போது அவருக்கு தொண்டையில் சிறிய பிரச்சனை ஏற்பட்டதால் அப்பாடலை பாடும் வாய்ப்பு மலேசியா வாசுதேவனுக்கு கொடுக்கப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான அந்தப்பாடல் தமிழகத்தில் ஒலிக்காத கிராமங்களே இல்லை.

‘பூவே இளைய பூவே...’, ‘கோடைகாலக் காற்றே...’ ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ போன்ற பாடல்கள் இப்போதும் கூட கேட்கும் ஒவ்வொருவர் இதயத்திலும் இதம் சேர்க்கும். முதல் மரியாதை படத்தில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் அப்படியே சிவாஜியின் உடல் மொழிக்கு ஏற்ப அமைந்தது. ‘ஏய் குருவி... சிட்டுக் குருவி...’ ‘பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா’... இந்த பாடல்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நீங்கள் தமிழ்சினிமாவின் இசையை கொண்டாடவே முடியாது.

ரஜினி படப்பாடல்கள் எத்தனையோ ஹிட் அடித்திருந்தாலும் ‘முரட்டுக் காளை’ படத்தில் ரஜினிக்கு அமைந்த ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலானது எப்போதும் மலேசியா வாசுதேவனின் பெயரைச் சொல்லும். அதுமட்டுமல்ல, ரஜினிக்கு அவர் பாடிய ‘சொல்லி அடிப்பேனடி’, ‘என்னோட ராசி நல்லராசி’ போன்ற பாடல்கள் ரஜினியின் இமேஜை மேலும் மேலும் வளர்க்க உதவியது.

இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். இந்நாளில் அவர் பாடிய பாடல்கள் மூலம் அவரை நினைவு கூர்வோம்.