உலகின் பல நிலப்பரப்புகள் மனிதன் தனது பயணத்தின் மீது கொண்ட காதலினால் கண்டுபிடித்தது தான். இன்று உலக நாடுகள் எல்லாம் ஒரு தைக்கப்பட்ட வரைபடமாக நம் கையில் இருக்கிறது என்றால் அதன் பின்னாள் நடந்த கால்களின் தேடல் எத்தனை…? கடல் பயணங்கள் எத்தனை…? அப்படியான ஒரு பயணவெறியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பரப்பு தானே அமெரிக்கா. யுவாங்சுவாங் போன்ற பயணிகள் நமக்கு விட்டுச்சென்ற அனுபவ குறிப்புகள் எத்தனை சுவாரஸ்யமானவை. எல்லா பயணங்களுக்கும் காரணம் அவசியமில்லை ’பயணித்தல்’ என்ற காரணமே போதுமானது. ஆஸ்திரேலியாவின் ’கேமல் லேடி’ என்று அழைப்படும் பெண் எழுத்தாளர் ’ராபின் டேவிட்சன்’ மேற்கொண்ட ஒரு பாலைவன பயணம் பற்றியது தான் இத்திரைப்படம்.
Tracks (2013)
“இந்த உலகில் பலருக்கு வீடுகள், கிடையாது. பலருக்கு உலகமே வீடு தான். நான் இரு தரப்பையும் சேர்ந்தவள்” என்ற ராபின் டேவிட்சனின் வரிகளோடு துவங்கிகிறது முதல் காட்சி.
1977ஆம் ஆண்டு 27வயதான ‘ராபின் டேவிட்சன்’ ஆஸ்திரேலியாவின் 2000 மைல் பாலைவனத்தை கடந்து இந்தியப் பெருங்கடலை அடைய விரும்புகிறார். அதற்கான முயற்சிகள் முன்னேற்பாடுகளை எல்லாம் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கியிருந்தார்.
பாலைவனம் என்பது மணல் சமுத்திரம். கொஞ்சம் பாதை மாறினாலும் உயிர் பிழைக்க முடியாது. இப்படி பாலைவனத்தில் திசை தெரியாமல் தொலைந்து போய் உயிரிழந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ‘ராபின் டேவிட்சனின்’ தந்தையும் அப்படியொரு பயண காதலர் தான். 1935ல் ஒரு நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்தவர் பிறகு, மற்றொரு பயண முயற்சியில் அவர் காணாமல் போய்விட்டார். அதன்பிறகு ‘ராபின் டேவிட்ச’னின் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
’ராபின் டேவிட்சன்’ தனது பயணத்துக்காக தேவைப்படும் ஒட்டகங்களை முதலில் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதற்காக ஒரு தனியார் ஒட்டக பூங்காவில் வேலைக்கு சேர்கிறார். ”ஆறுமாதம் ஊதியமில்லாமல் வேலை செய்தால் நான் உனக்கு ஒட்டகங்களை பற்றி கற்றுக்கொடுக்கிறேன் கூடவே இரண்டு ஒட்டகங்களும் கொடுக்கிறேன்” என்ற பூங்கா முதலாளியின் போலி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போகிறாள் அவள்.
பிறகு ஒரு பெரியவர் அவளுக்கு மூன்று ஒட்டகங்களை கொடுக்கிறார். அதில் ஒன்று குட்டி ஈனும் தருவாயில் இருந்ததால் போனஸாக அவளுக்கு அழகிய குட்டி ஒட்டகம் ஒன்றும் கிடைக்கிறது. அவற்றிற்கு டோக்கி, ஸெல்லி, பாப் என பெயர் சூட்டி அழைக்கிறாள். கூடவே அவளது செல்ல நாய் ’டிகிடி’யும் பயணத்தில் பங்கு கொள்கிறது. ஒட்டகங்கள் தயார் என்றாலும். உணவு உள்ளிட்ட பல தேவைகளுக்காக ஸ்பான்சர் தேவைபடுகிறது. நேஷனல் ஜியோகிராபி பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞர் ’ரிக்கி சாலமன்’ தனது பத்திரிக்கை மூலம் ஸ்பான்சர் பெற்றுத் தருகிறார். ஆனால் ஸ்பான்சர்களின் விருப்பப்படி ‘ராபின் டேவிட்ச’னின் பயணத்தை புகைப்படம் எடுக்கும் பொறுப்பு ‘ரிக்கி சாலமனுக்கு’ கொடுக்கப்படுகிறது. இதனால் ஆறுமாத பயணத்தில் மூன்று நான்கு முறை அவர் ‘டேவிட்ச’னை பயண வழியில் சந்தித்து புகைப்படம் எடுக்கிறார். ’கேமல் லேடி’ என்ற பெயரில் அது பத்திரிக்கை செய்தியாக வருகிறது.
அவளது பயணத்தில் பயண மூடைகளை சுமந்து கொண்டு ஒட்டகங்கள் நடக்க ‘ராபின் டேவிட்ச’னும் மேற்கு திசை நோக்கி நடக்கிறாள். நாட்கள் நகர்கின்றன. பாலைவனப் புயல், வன ஒட்டகங்களின் தாக்குதல்களை எல்லாம் எதிர்கொண்டு பயணம் துரிதமாக செல்கிறது. இடையில் ஆங்காங்கு சந்திக்கும் மனிதர்கள் சிலர் அவளுக்கு உதவியும் செய்கின்றனர். அதில் ‘ஏடி’ என்ற முதியவர் 84வது நாள் பயணத்தில் அவளுக்கு சிறிது தூரம் துணையாக வருகிறார்.
ஒரு நாளைக்கு தோரயமாக 20 மைல் தொலைவு நடக்கும் ’ராபின் டேவிட்ச’னுக்கு இடைஇடையே காரில் வந்து தன்னை புகைப்படம் எடுத்துச் செல்லும் ’ரிக்கி சாலம’னுடம் நெருக்கம் உண்டாகிறது. ஒரு பனி இரவில் பாலை பெருவெளியில் இருவரும் தேகம் பரிமாறி சங்கமிக்கும் காட்சி கவிதை. நீர்நிலையொன்றில் ’கேமல் லேடி’ தனது செல்ல நாயுடன் நிர்வாணமாக நீந்தி மகிழும் காட்சியில் பார்வையாளனுக்கு ஆடைகள் சுமையாக தோன்றும்.
தன் வளர்ப்பு ஒட்டகங்களை வன ஒட்டகங்களிடமிருந்து பாதுகாக்க அவற்றை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறாள் ராபின் டேவிட்சன். அது அவளது விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்கு அங்கு வேறு வழியில்லை. அவளது செல்லநாய் பயணத்தில் தவறுதலாக விஷத்தை உண்டு இறந்து போகிறது.
ஒட்டகங்களுடன் தொடரும் அவளது 2000 மைல் பயணம் வெற்றிகரமாக பெருங்கடலின் கரையில் நிறைவுபெறுகிறது. அங்கு அவளுக்காக ’ரிக்கி சாலமன்’ காத்திருக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கிறார்கள்.
தனது இந்த உலர்ந்த பயணத்தை ’ராபின் டேவிட்சன்’ ஈர சொற்களால் ‘ட்ரக்ஸ்’ என்ற நூலாக எழுதினார், இதைத் தழுவி இயக்குனர் ’ஜான் க்ரான்’ இப்படத்தை இயக்கினார். 1980 முதல் 1990 வரை ஐந்துமுறை இந்த புத்தகத்தை படமாக்கும் முயற்சி கைகூடவில்லை. பிறகு 2013ல் சவுத் ஆஸ்திரேலியன் பிலிம் கார்ப்பரேசனின் நிதி உதவியுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. 2014ல் ஆஸ்திரேலியன் சினிமாட்டோகிராப்பர்ஸ் சொசைட்டி மற்றும் பிலிம் கிரிடிக்ஸ் சர்க்கிள் ஆஃப் ஆஸ்திரேலியா இணைந்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ”மாண்டி வாக்க”ருக்கு விருது கொடுத்து கவுரவித்தது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இப்படம் பெற்றது.
’ராபின் டேவிட்சன்’ இந்த பயணத்தை துவங்கும் போது “ஏன்..? எதற்காக இந்த பயணத்தை செய்யப்போகிறீர்கள்…? இதனால் என்ன பயன்…?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “ஏன் இந்த பயணம் கூடாது…?” என்ற தனது எதிர் கேள்வியை பதிலாக வைத்தார்.
படைப்பாளிகளின் உலகை புரிந்துகொள்ள முயல்வது கூட ஒரு சாகசப் பயணம் தானே…? மழையில் நனைவதற்கெல்லாமா காரணங்கள் தேவை…?