சினிமா

“அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த கூடாது”-சூர்யாவுக்கு ஜோதிமணி எம்.பி ஆதரவு

“அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த கூடாது”-சூர்யாவுக்கு ஜோதிமணி எம்.பி ஆதரவு

kaleelrahman

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் தொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ஆதரவும் பெருகியுள்ளது. இந்நிலையில் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சூர்யாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், “ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி.

ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.

ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது. இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது. இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது.

அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. சூர்யாவை அச்சுறுத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை படைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ள வெண்டும். நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற  காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது. அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ”'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்; 7 நாட்களில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; அக்னி குண்ட காட்சிகளை நீக்க வேண்டும்” என சூர்யா, ஜோதிகா, 2டி நிறுவனம், இயக்குனர் ஞானவேல், அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் என நோட்டீசில் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.