சினிமா

“'இரவின் நிழல்' படத்தை அமெரிக்காவில் எடுத்தால் உலகமே பாராட்டியிருக்கும்”- ஏ.ஆர்.ரஹ்மான்

“'இரவின் நிழல்' படத்தை அமெரிக்காவில் எடுத்தால் உலகமே பாராட்டியிருக்கும்”- ஏ.ஆர்.ரஹ்மான்

JustinDurai

'இரவின் நிழல்' படத்தை யூரோ மற்றும் அமெரிக்காவில் எடுத்திருந்தால்  உலகமே பாராட்டி இருக்கும்; தமிழ்நாட்டில் எடுத்திருக்கிறோம் பார்ப்போம்' என ஏ.ஆர்.ரஹ்மான்  தெரிவித்தார்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியின் அரங்கத்தில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி மற்றும்  கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள 'இரவின் நிழல்'  திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் உருவாகியுள்ள  ‘மாயவா சாயவா’  எனும் பாடலை  இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் திரைப் பிரபலங்கள்  உள்ளிட்டோர்  இணைந்து  வெளியிட்டனர்

நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன்  மற்றும் பாடகி ஷோபனா சந்திரசேகர் (நடிகர் விஜய்யின் தாயார்) மேலும் ரோபோ சங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.  இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரவின் நிழல் Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இப்படத்தில் ஆஸ்கர் வின்னர்கள் கட்டா லங்கோ லியோன்ர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான்  சவுண்ட் டிசைன் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆஸ்கர் வின்னர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்கள்.

நிகழ்ச்சியில் மேடையில்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்க்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார்.

விழாவில் ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில், ''பார்த்திபனுடன் படம் பண்ணனும் என்பது, எனக்கு ரொம்ப நாள் ஆசை. தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்து இந்த மாதிரியான  ஒரு படம் பண்ணுவது மிகவும் கடினம். ஆனால்  நம்ம ஊர்ல எல்லாருக்கும் எல்லா திறமையும் உள்ளது. நம்ம நினைச்சா என்னவெனா செய்யலாம்.  நானும் படம் பண்ணி இருக்கிறேன். 99 சாங்ஸ். அது பண்ணதால சினிமாவின் நுணுக்கங்கள் தெரியும். இதே படத்தை யூரோ மற்றும் அமெரிக்காவில் எடுத்திருந்தால்  உலகமே பாராட்டி இருக்கும். தமிழ்நாட்டில் எடுத்திருக்கிறோம் பார்ப்போம்'' என்றார்.

கரு பழனியப்பன் பேசுகையில், ''ஏ.ஆர்.ரஹ்மான்  ஒரு சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தந்தை, சிறந்த கணவர். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த அரசியல் தெரிந்தவர் என்பதால் தமிழகம் முழுதும் சிறந்து விளங்குகிறார். தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் சாதாரண முகங்கள் எல்லாம் இப்படத்தின் மூலம்  திரையில்  வருகிறது. உலக சாதனை செய்வதற்கு உள்ளூரிலே ஆள் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை  கவனிக்கவில்லை. பெருமையான தமிழ் மொழி எங்களிடம்  இருக்கிறது. மொக்கையான மொழியை எங்களிடம் திணிக்காதீர்கள்'' என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், ''ஏ.ஆர். ரஹ்மானுடன் படம் பண்ண வேண்டும் என்பது 20 ஆண்டுகால கனவு. ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கடைசியில் அந்த  படத்தில் இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ஜூன் 5 ஆம் தேதி இரவும் பகலும் படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது'' என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பார்த்திபன் கலந்துரையாடிய போது பார்த்திபன் பயன்படுத்திய மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் சட்டென்று கோபம் அடைந்த பார்த்திபன் மைக்கை வீசி எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிக்க: 'இந்தி திணிப்பை ஏற்க முடியாது; தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது' - ப.ரஞ்சித் பேட்டி