ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பும் இந்திய உளவாளி விசாம் (கமல்ஹாசன்), ஓமர் (ராகுல் போஸ்) உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிக்க இரண்டாவது முறையாக எடுக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்-2.
நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதி கமல்ஹாசனாக மாறிய பிறகு வரும் படமென்பதால் துவங்குவதற்கு முன்பாகவே மக்கள் நீதி மய்யத்தின் தீம் பாடல் திரையிடப்படுகிறது. அதற்கேற்ப படத்திலும் சில இடங்களில் “அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினால் தீவிரவாதம் ஒடுங்கிவிடும்”, “200 ஆண்டுகளாக வெள்ளைக்காரன் சுரண்டியதை 64 ஆண்டுகளில் சுரண்டியவர்கள்” என இடையிடையே வசனங்கள் மூலம் அரசியலும் பேசுகிறார் உலகநாயகன்.
விஸ்வரூபத்தில் உளவாளியாக ஆப்கானிஸ்தான் சென்று ஓமர் குழுவினரின் ரகசியங்களை அறிந்து அவர்களை முயற்சியில் இறங்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து வருவார். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நாச வேலைகளுக்கான சதிகளை டெல்லி, லண்டன் என பறந்து சென்று முறியடிக்கிறார்.
தொடக்கத்தில் இருந்து விசாம், நிருபமா ஜோடியோடு ஒட்டிக்கொண்டு வரும் அஸ்மிதா (ஆண்ட்ரியா) அவ்வப்போது ரகளையாக கலாய்ப்பதிலும், இராணுவ பயிற்சியில் ஓரக்கண்ணால் கமல்ஹாசனை ரசிப்பதிலும் ஈர்க்கிறார். மனைவியாக வரும் பூஜா குமார் எப்போதும் குழப்பத்தில் இருப்பது, ரொமான்ஸ் செய்ய துடிப்பது, அம்மா முன் அழுது தவிப்பது எனக் கொடுத்த வேலையில் நிறைவாக்க செய்திருக்கிறார்.
கதாநாயகனை வில்லன் என சொல்லும் ஓமர் குழவினர் ஒவ்வொருவர் பார்வையிலும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறார்கள். உலகையே அழிக்கக் தொடங்கும் ஓமர், அழிந்துவிட்டதாக நினைக்கும் தன் குடும்பத்தினர் கண்முன் நிற்கும்போது கலங்குமிடம் கமல் டச்.
சில இடங்களில் அமைதியும், தேவையான இடங்களில் அதிரடியும் காட்டும் முகமது ஜிப்ரான் ‘நானாகிய நதிமூலமே’ பாடலில் விசாமின் ஒட்டுமொத்த அம்மா பாசத்தையும் இசையாக்கியிருக்கிறார். சனு வர்கீஸ், ஷாம்தத் சாய்னுதீன் ஒளிப்பதிவில் அத்தனை துல்லியம்.‘விஸ்வரூபம்2’ படத்தில் கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சம் சண்டைக்காட்சிகள். ரத்தம் தெறிக்கும் வகையிலும் யதார்த்தமாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த புரடக்ஷன் டீமிற்கும் ஒரு ராயல் சல்யூட்!
முதல் பாகத்தில் இருந்த சில குழப்பங்களை இந்தமுறை தெளிவாக்கியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசன், திரைக்கதையை இன்னும் வேகப்படுத்தியிருந்தால் நிச்சயம் இது நடிகர் கமல்ஹாசனுக்கு கம்பீரமான விஸ்வரூபமாக இருந்திருக்கும்.