‘தாண்டவ்’ படத்தில் இந்து மதத்தை ஏளனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், படக்குழு அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தாண்டவ் வெப் சீரிஸ் ஒரு புனைவு. அதில் இடம்பெற்ற காட்சிகள், நபர்கள் என அனைத்தும் தற்செயலாக அமைந்தவை. படக்குழுவிற்கு எந்த ஒரு தனிநபரையோ, ஜாதியையோ, மதத்தையோ, இனத்தையோ, சமூகத்தையோ, மத நம்பிக்கைகளையோ , அரசியல் தலைவர்களையோ இழிவுப்படுத்தும் எண்ணம் இல்லை. இருப்பினும், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் யாருடையாவது மனதை புண்படுத்தியிருந்தால் படக்குழு சார்பாக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.” என்று கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைமில் வெளியான வெப் சீரிஸ் ‘தாண்டவ்’. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வெப் சீரிஸில், ஹிந்து மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ வான மனோஜ் கோடக் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகமும் அமேசான் தளத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டது.
இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் , கதாசிரியர் கௌரவ் சொலாங்கி, தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.